கிணறு வெட்டும் வேலை, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

அரசுக்கும் லாபம்; ‘ஆம் ஆத்மி’க்கும் லாபம்!

உற்பத்தி அதிகமாகவும், தேவை குறைவாகவும் இருக்கும் எந்த ஒரு பொருளும் விலை குறைவதுதான் இயற்கை. அந்த அடிப்படையில், உலகில் கச்சா எண்ணெய் விலை சரிவதில் யாருக்கும் ஆச்சர்யம் இருக்க வாய்ப்பில்லை. இப்படி சரியும் எண்ணெய் விலை, சர்வதேச அரசியல், பொருளாதார சூழலில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மாற்றங்கள், யாராலும் ஒதுக்கித் தள்ளி விட முடியாதவையாக இருக்கின்றன.
கச்சா எண்ணெயை அதிகமாக பயன்படுத்தும் நாடு, அமெரிக்கா. ஒரு காலத்தில் இறக்குமதியை மட்டுமே நம்பியிருந்த அந்நாடு, ‘இப்படியே போனால், கட்டுபடியாகாது’ என்று கருதி, உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கத் தொடங்கியது. இப்போது அங்கு தேவைக்குத் தகுந்தபடி,  எண்ணெய் உற்பத்தியாகிறது.
விளைவு, காலம் காலமாக, அமெரிக்காவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்து, டாலர் நோட்டுக்களை எண்ணிக் கொண்டிருந்த சவுதி, நைஜீரியா, அல்ஜீரியா நாடுகளின் நிலைமை, திண்டாட்டம் ஆகி விட்டது. உற்பத்தியாகும் எண்ணெயை விற்றால்தான் வருமானம். ஆகவே, இந்நாடுகள், விற்பனைச் சந்தையை தேடிக்கொண்டிருக்கின்றன.
உள்நாட்டுப்போர் காரணமாக, உற்பத்தி தடைபட்டிருந்த ஈராக்கும், அதிலிருந்து பிரிந்து தனி நாடாக முயற்சிக்கும் குர்து தன்னாட்சிப் பிரதேசமும், நாளுக்கு நாள் உற்பத்தியை அதிகரிக்கின்றன. அணு ஆயுதம் தயாரிப்பு விவகாரத்தால் தடையில் சிக்கியிருந்த ஈரான், மீண்டும் முழு அளவில் கச்சா எண்ணெயை சந்தைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டிருக்கிறது. ரஷ்யா உள்ளிட்ட முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும், எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
இந்த உற்பத்திக்கு தகுந்தபடி, உலக நாடுகளின் தேவை, அப்படியொன்றும் பிரமாதமாக அதிகரித்து விடவில்லை. முன்னேறிய ஐரோப்பிய நாடுகளில், பொருளாதார தேக்க நிலை நீடிக்கிறது. குறைந்த எரிபொருள் பயன்படுத்தும்படியான வாகனத் தயாரிப்புகள் அந்நாடுகளில் அதிகரித்து விட்டன.
கச்சா எண்ணெயை அதிகப்படியாக இறக்குமதி செய்யும் நாடுகளில் மற்றொன்று சீனா. அங்கு, பொருளாதாரம் சில ஆண்டுகளாக ஆட்டம் கண்டு வருகிறது. தொழில் துறையை தேக்க நிலையில் இருந்து மீட்டெடுக்க அரசு படாதபாடு படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், உலக நாடுகளின் ஒரு நாள் கச்சா எண்ணெய் உற்பத்தி, ஒன்பது கோடியே 50 லட்சம் பீப்பாய்களாக இருக்கிறது. தேவைப்படுவது, ஒன்பது கோடியே முப்பது லட்சம் பீப்பாய்கள் மட்டுமே. அதாவது, நாளொன்றுக்கு 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய், உபரியாக இருக்கிறது. வரும் ஆண்டிலும் உற்பத்தியை காட்டிலும், நாளொன்றுக்கு குறைந்தது பத்து லட்சம் பீப்பாய்கள் உபரியாக இருக்கும் என்கிறது, நிபுணர்களின் கணக்கு. விலை சரிவதற்கு இதுவே பிரதான காரணம்.
கடந்த வார நிலவரப்படி, அமெரிக்கச்சந்தையில், கச்சா எண்ணெய் விலை, 35 டாலர்களுக்கு வந்திருக்கிறது. நிலைமை எப்போது சரியாகும் என்று தெரியாத, எண்ணெய் வள நாட்டுத்தலைவர்கள், அபயக்குரல் எழுப்பியபடி இருக்கின்றனர்.
கடந்த, 2008 ஜூலை மாதம், கச்சா எண்ணெய், பீப்பாய் 145 டாலர்கள் என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அந்த சில மாதங்கள், எண்ணெய் வள நாடுகளுக்கு பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். டாலர்களை அள்ளிக் குவித்து விட்டனர். அதற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து, இந்த சில மாதங்களாக, விலை அதல பாதாளத்தில் இருக்கிறது.
ஒவ்வொரு வாரமும், தொழில் துறை, உற்பத்தித்துறை குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகும்போதெல்லாம், கச்சா எண்ணெய் விலை சரிந்து கொண்டே இருக்கிறது. ‘ஓபெக்’ என்ற பெயரில் செயல்படும் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்போ, என்ன செய்வதென்று தெரியாமல், கையைப் பிசைகிறது. ஈரான், வெனிசுலா, அல்ஜீரியா போன்ற நாடுகள், உற்பத்தியை குறைப்பது பற்றி முடிவெடுக்கும்படி, ‘ஓபெக்’ அமைப்பை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமைப்பில் பிரதான பாத்திரம் வகிக்கும் சவுதி அரசு, அதற்கு தயாரில்லை.
உற்பத்தியை குறைத்தால், கூட்டமைப்பில் இல்லாத மற்ற நாடுகளிடம் சந்தையை இழக்க நேரிடும் என்று, சவுதி அரேபியா கவலைப்படுகிறது. 1980களில், விலைச்சரிவை தடுக்கும் நோக்கத்துடன், சவுதி அரேபியா, உற்பத்தியை மூன்றில் ஒரு பங்காக குறைத்தது; விலையும் உயர்ந்தது. ஆனால், சவுதி இழந்த சந்தையை, மற்ற எண்ணெய் வள நாடுகள் பிடித்துக்கொண்டு விட்டன. சந்தையை இழந்ததும், வருமானத்தை இழந்ததும் மட்டுமே சவுதி கண்ட பலன். அப்படி சூடு பட்ட காரணத்தால்தான், இம்முறை உற்பத்தியை குறைக்க மறுக்கிறது, அந்நாடு.
பெருமளவு அந்நியச் செலவாணியை கையில் வைத்திருக்கும் சவுதி அரசு, எவ்வளவு அடிபட்டாலும் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், விலைச்சரிவை தாங்கிக்கொள்ள முடியாத வெனிசுலா, ஈரான், ரஷ்யா போன்ற நாடுகளில், பொருளாதாரம் படாதபாடு படுகிறது.
இந்த நாடுகளுக்கு, குறைந்தபட்சம் பீப்பாய்க்கு, 100 டாலர்களாவது கிடைத்தால்தான், சமூக நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்கிற தர்மசங்கடமான நிலை.
இப்படிப்பட்ட ஒரு எண்ணெய் விலை வீழ்ச்சியின்போதுதான், வல்லரசாக இருந்த சோவியத் யூனியன் திவால் ஆகிப்போனதாக, சர்வதேச ஊடகங்கள் வேறு பீதி கிளப்பியபடி இருக்கின்றன.
வெனிசுலாவில் ஹியூகோ சாவேஸ், ரஷ்யாவில் புதின் இருவருமே, கச்சா எண்ணெய் விலை உயர்வால், கதாநாயகர்கள் ஆனவர்கள். சாவேஸ் இறந்து விட்டார். அவருக்குப்பின் பதவி வகிக்கும் அதிபர் மதுரோ, இப்போது எண்ணெய் விலைச்சரிவால் வருவாய் இழந்து, மக்கள் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் விழி பிதுங்குகிறார்.
ரஷ்யாவில் விலை உச்சத்தில் இருந்தபோது, மக்கள் மத்தியில் செல்வாக்குப்பெற்ற புதின், சர்வதேச அரசியலிலும், உள்நாட்டு அரசியலிலும், அதிரடி அரசியலுக்கு பெயர் போனவர்.  எண்ணெய் விலை வீழ்ச்சி அடைவது அவருக்கும் நிச்சயம் சிக்கல்தான். விலை தாறுமாறாக உயர்ந்தால், அவரை அடக்கி வைக்க நினைக்கும் மேற்கத்திய நாடுகளின் கனவில் மண் விழுந்து விடும் என்பது முக்கியம்.
விலைச்சரிவின் பின்னணியில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் சதி இருப்பதாகவும், சவுதி அதற்கு துணைபோவதாகவும், நீண்ட காலமாக கூறப்படும் புகார்களில் உண்மையும் கொஞ்சம் இருக்கிறது.
ரஷ்யா, ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை சீரழிக்கும் அமெரிக்காவின் திட்டத்துக்கு சவுதி உடந்தையாக இருப்பதாக, எண்ணெய் வளத்தை நம்பியிருக்கும் நாட்டு அரசியல்வாதிகள், புகார்ப்பட்டியல் வாசிக்கின்றனர்.
கச்சா எண்ணெயை அதிகப்படியாக பயன்படுத்தும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. அங்கு, ‘ஷேல்’ எனப்படும் களிப்பாறை எண்ணெய் எடுப்பது அதிகரித்து விட்டது. தரைமட்டத்தில் இருந்து பல ஆயிரம் அடிக்கு கீழே, பாறைகளுக்கு மத்தியில் இருக்கும் எண்ணெயை, உயர் அழுத்தம் கொண்ட ரசாயனத்தை பீய்ச்சியடித்து வெளிக்கொண்டு வருகின்றனர். இதற்கு செலவும் அதிகம். விலை தாறுமாறாக சரிந்தால், இப்படி எண்ணெய் எடுக்கும் நிறுவனங்கள் நஷ்டத்தில் மூடப்பட்டு விடும் என்பது சவுதி, கத்தார், அமீரக நாடுகளின் எண்ணமாக இருக்கும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
யாருக்கு லாபம்
சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், இலங்கை, வங்கதேசம் போன்ற, தேவைக்கும் குறைவான எண்ணெய் உற்பத்தி கொண்ட நாடுகளுக்கு, இப்போதைய விலைச்சரிவால் லாபம். இவர்களுக்கு அந்நியச் செலாவணி மீதமாகும். மீதமாகும் பணத்தை, மற்ற செலவினங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு வந்திருக்கிறது. விலை குறைந்திருக்கும் இந்த வேளையில், கச்சா எண்ணெயை அதிகப்படியாக வாங்கி இருப்பு வைப்பதற்கும் சீனா தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
யாருக்கு நஷ்டம்
பெட்ரோலிய உற்பத்தியை பிரதான வருமானமாக கொண்டிருக்கும் அனைத்து நாடுகளுக்கும், விலைச்சரிவால் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதில், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், கத்தார் போன்ற பணமிகுதி கொண்ட நாடுகளுக்கு, நஷ்டம் இருந்தாலும், கடுமையான பாதிப்பு என்றெல்லாம் சொல்ல முடியாது.
ஆனால், அடிப்படைத் தேவைகளுக்கே, பெட்ரோலிய வருமானத்தை நம்பியிருக்கும் ரஷ்யா, வெனிசுலா, ஈரான், நைஜீரியா, ஈக்வடார், பிரேசில் போன்ற நாடுகளில் இந்த விலைச்சரிவு பல பிரச்னைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சமூக நலத்திட்டங்களுக்கு அதிகம் செலவிட முடியாத நிலையை நோக்கி, இந்நாடுகள் சென்று கொண்டிருக்கின்றன. வெனிசுலா, அல்ஜீரியா போன்ற நாடுகள் திவாலாகும் நிலையை எட்டிவிட்டன.
அமெரிக்காவை முதல் எதிரியாக கருதிக் கொண்டிருக்கும் ஈரானை, அந்த நாட்டுத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிலைக்கு கொண்டு சென்றதும், இந்த விலைச்சரிவுதான். ‘திவால் நிலைமையில் இருக்கும் வெனிசுலாவை நம்பி இனி பயனில்லை’ என்று கருதியே, கம்யூனிஸ்ட் நாடான கியூபா கூட, அமெரிக்காவுடன் சமாதானத்துக்கு வந்து விட்டது என்றும், சர்வதேச அரசியல்நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவுக்கு லாபம்
இந்தியாவின் மொத்த இறக்குமதியில் மூன்றில் ஒரு பகுதி, கச்சா எண்ணெய் மட்டுமே. ஆகவே, கச்சா எண்ணெய் விலைச்சரிவானது, மத்திய அரசுக்கு நல்ல வாய்ப்பாக, அமைந்திருக்கிறது. மத்தியில் பா.ஜ., அரசு ஆட்சிக்கு வந்தபின், 20 முறை பெட்ரோல், டீசல் விலையை குறைத்து விட்டதாக கூறிக்கொள்வதற்கு, ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது, இந்த விலைச்சரிவு. பண வீக்கத்தை குறைக்கவும், பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுகட்டவும், இந்த வாய்ப்பை அரசு பயன்படுத்திக் கொள்கிறது.
எண்ணெய் நுகர்வில் உலகில் நான்காம் இடத்தில் இருக்கும் இந்தியா, தினமும் 32 லட்சம் பீப்பாய்கள் என்ற அளவில் பயன்படுத்துகிறது. இதில், 17 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி, மற்றதெல்லாம் இறக்குமதி.
மத்தியக்கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் என, 30 நாடுகளில் இருந்து குறைந்த விலையில் கிடைக்கும் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது.
இந்தியா கொள்முதல் செய்யும் எண்ணெய்க்கு, துபாய், ஓமன் நாடுகளின் ‘புளிப்பு’ கச்சா எண்ணெய், வடக்குக்கடல் ‘பிரண்ட்’ ஸ்வீட் கச்சா எண்ணெய் ஆகியவற்றின் விகிதாச்சார சராசரி அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பெட்ரோலியப்பொருட்கள் விலை நிர்ணயம், மானியம் வழங்குதல் போன்ற காரணங்களுக்காக மத்திய பெட்ரோலியத்துறை, கச்சா எண்ணெய் விலையை கணக்கிட்டு அறிவிக்கிறது.
கச்சா எண்ணெய் விலையில், ஒரு டாலர் குறைந்தாலும், இந்தியாவுக்கு, 8578 கோடி ரூபாய் மீதமாகும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயரும்போதும், கச்சா எண்ணெய்க்கு இந்தியா செலவிடும் பணத்தின் மதிப்பு குறையும். அதாவது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, ஒரு ரூபாய் உயர்ந்தாலும், 12 ஆயிரத்து 328 கோடி ரூபாய் நாட்டுக்கு மிச்சம். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ந்தால், நிலைமை தலைகீழ்.
ஒரு வேளை கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், சோப்பு, சீப்பு, கண்ணாடி முதல் அரிசி, தக்காளி, புளி வரை, அனைத்து உற்பத்திப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயரும். அதிகப்படியான பாதிப்பை தாங்கிக் கொள்ளப் போவது, அடிமட்டத்தில் இருக்கும் அப்பாவி நுகர்வோர் மட்டுமே.
ஆகவே, ‘நரி, இடம் போனால் என்ன, வலம் போனால் என்ன, நம்மைக் கடிக்காமல் விட்டால் போதும்’ என்னும் எண்ணம் கொண்டிருக்கும் ‘ஆம் ஆத்மி’க்களுக்கு, எண்ணெய் விலைச்சரிவு, மகிழ்ச்சியை தருவதாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

சனி, 30 மே, 2015

உதை வாங்கிய ஊழல் ஒழிப்பாளர்கள்!


விளையாட்டுப் போட்டிகள், சர்வதேச அரசியலுக்கு இணையாக விவாதிக்கப்படுவது, இதுவொன்றும் முதல் முறையல்ல. சோவியத் யூனியன் நடத்திய ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா தலைமையிலான நாடுகள் புறக்கணித்த வரலாறு ஏற்கனவே நிகழ்ந்திருக்கிறது. சமீப காலத்தில்கூட, ரஷ்யாவின் சூச்சியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தேர்தலும், பனிப்போரின் நீட்சிகளாக, சர்வதேச செய்திகளாகி இருக்கின்றன. அந்த பட்டியலில், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ‘பிபா’ தேர்தலும், சேர்ந்து கொண்டிருக்கிறது.
‘பிபா’ அமைப்புக்கு நடந்த தேர்தலில், சுவிட்சர்லாந்து நாட்டவரான, 79 வயது செப் பிளாட்டர் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். கூட்டமைப்பின் மொத்தமுள்ள 209 நாட்டு கால்பந்து சங்கங்களில், 133 நாட்டு கால்பந்து சங்கங்கள் அவருக்கு ஓட்டளித்திருக்கின்றன. ஆசியா, ஆப்பிரிக்காவை சேர்ந்த நாடுகளும், ரஷ்யாவும் அவருக்கு ஆதரவாக ஓட்டளித்தன. நிச்சயமாக, இந்திய கால்பந்து சங்கமும் அவருக்குத்தான் ஓட்டளித்திருக்கும்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, ஜோர்டான் இளவரசர், 39 வயது அலி பின் அல் ஹூசேனுக்கு கிடைத்தவை 73 ஓட்டுகள் மட்டுமே. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, கனடாவின் ஆதரவு இருந்தும், முதல் சுற்று தேர்தல் முடிவிலேயே, அலி ஹூசேன் தோல்வியை ஒப்புக்கொண்டு, வாபஸ் பெற்று விட்டார்.
கடந்த 17 ஆண்டு காலமாக, ‘பிபா’ கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் பிளாட்டர், இந்த முறையும் அவ்வளாக எதிர்ப்பின்றி வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால், அமெரிக்கா- ரஷ்யா இடையிலான மோதல், அவருக்கு சனிப்பிடிக்க வைத்து விட்டது. தங்கள் விருப்பத்துக்கு மாறாக, 2018ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானபோதே, அமெரிக்கர்களுக்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்திருக்க வேண்டும். எதிர்ப்பை பல்வேறு வகையிலும் வெளிக்காட்டிய அமெரிக்கர்கள், கழுத்தறுத்த பிளாட்டரை ஒழிப்பதற்கு கடைசி ஆயுதமாக, ஊழல் பிரம்மாஸ்திரத்தை ஏவினர்.
அவர்கள் ஏவிய ஆயுதம், ‘பிபா’வை ஒரு கை பார்த்து விட்டது. இரு துணைத்தலைவர்கள், செயற்குழு உறுப்பினர் ஒருவர் என பெரும்புள்ளிகள், ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிளாட்டர் மீது தனிப்பட்ட புகார் இல்லையென்றாலும், ‘அவர்தான் ஊழலுக்கு பொறுப்பு. ஆகவே அவர் போட்டியிடக்கூடாது; தேர்தலில் இருந்து வெளியேற வேண்டும்’ என்று, அமெரிக்காவும், அடிப்பொடி ஐரோப்பியர்களும் கூக்குரல் எழுப்பினர்.
‘உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க மாட்டோம்; பிபா அமைப்பில் இருந்து விலகிக்கொள்வோம்’ என்றெல்லாம் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு மிரட்டியது. பிரிட்டனும் அப்படியே தெரிவித்தது. பல்லாண்டு காலமாய், ‘பிபா’ ஸ்பான்சர்களாக இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், ஊழல் பற்றி கவலையும், வருத்தமும் தெரிவித்துக் கொண்டே இருந்தன.
‘உக்ரைன் விவகாரத்தால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ரஷ்யாவில் உலகக்கோப்பை போட்டி நடத்த விடக்கூடாது’ என்பதே, அமெரிக்க, ஐரோப்பியர்களின் நோக்கம். ஆனால், பாம்பின் கால் பாம்பறியும் என்பார்களே! அமெரிக்கர்களின் எண்ணத்தை புரிந்து கொண்டு விட்ட பிளாட்டர், ‘வேலையைப் பாருங்கள்’ என்று கூறிவிட்டார். தேர்தலில் நின்று வென்றும் காட்டி விட்டார். உள்நோக்கத்துடன் ஊழல் ஒழிப்பாளர்களாக வேஷமிட்ட அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும், உதை வாங்கியிருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.
அமெரிக்கர்களின் நோக்கம் ஊழலை ஒழிப்பது மட்டுமே என்றால், அந்நாட்டவர்களேகூட நம்ப மாட்டார்கள்; ஆகவே அவர்கள் கூறியபடி ஓட்டளிப்பதற்கு பல நாடுகள் தயாராக இல்லை. குறிப்பாக, வறுமையின் பிடியில் இருக்கும் சின்னஞ்சிறு நாடுகள். அந்நாட்டு கால்பந்து சங்கங்களுக்கு, ‘பிபா’ அளிக்கும் கால்பந்து மேம்பாட்டு நிதி, உண்மையில் பெருந்தொகை என்றே குறிப்பிட வேண்டும். இந்தியா கூட, இதில் பயன் பெற்றிருக்கிறது. ஆகவே, பயன்பெற்ற பல்வேறு நாடுகளும், பிளாட்டரின் பின்னால் அணிவகுத்திருக்கின்றன.
‘பிளாட்டர் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்படுவதை தடுக்கவே, ‘பிபா’ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்’ என்பது, விவகாரத்தில் தொடர்புடைய ரஷ்யாவின் குற்றச்சாட்டு. ‘அமெரிக்காவில் நடக்காத, அமெரிக்கர்களுக்கு தொடர்பில்லாத ஒரு சம்பவத்துக்காக, அமெரிக்கர்கள் வலிய வந்து நடவடிக்கை எடுப்பது புதிராக இருக்கிறது’ என்பது, ரஷ்ய அதிபர் புதின் கருத்து. ‘உலகக்கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்காமல் போல எரிச்சலில், இங்கிலாந்தும், அமெரிக்காவும், உள்நோக்கத்துடன் புகாரை கிளப்புவதாக’ கூறுகிறார், பிளாட்டர்.
2018ல் உலகக்கோப்பை போட்டி நடத்துவதற்கான நாட்டை தேர்வு செய்யும் பணி, 2009ல் தொடங்கியது. ஒன்பது நாடுகள் விருப்பம் தெரிவித்தன. துவக்கத்திலேயே மெக்சிகோ விலகிக்கொண்டது. இந்தோனேசியாவின் மனு, அந்நாட்டு அரசு சம்மத கடிதம் வழங்காததால் தள்ளுபடி செய்யப்பட்டது.
பின்னர், ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளும், ஒவ்வொன்றாக போட்டியில் இருந்து விலகிக்கொண்டு விட்ட நிலையில், இங்கிலாந்து, ரஷ்யா, நெதர்லாந்து&பெல்ஜியம் கூட்டணி, ஸ்பெயின்&போர்ச்சுக்கல் கூட்டணி என நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இறுதிச்சுற்றில் இருந்தனர்.
2010ம் ஆண்டில் இதற்கான தேர்தல் ஜூரிச் நகரில் நடந்தது. இதில் இரண்டாம் சுற்று ஓட்டெடுப்பு முடிவில், ரஷ்யா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முதல் சுற்றில் ஒன்பது ஓட்டுகள் மட்டுமே பெற்ற ரஷ்யா, இரண்டாம் சுற்றில் 13 ஓட்டுக்களை பெற்றிருந்தது. முதல் சுற்றில் ஏழு ஓட்டுகளை பெற்றிருந்த போர்ச்சுக்கல்&ஸ்பெயின் கூட்டணி, இரண்டாம் சுற்றிலும் அதே ஏழு ஓட்டுகளை பெற்றது.
இப்படி நடத்தப்பட்ட தேர்தலில், உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்து, ஓட்டுக்களை வாங்கிவிட்டது ரஷ்யா என்பது மறைமுகமான குற்றச்சாட்டு. இதன் அடிப்படையில், ரஷ்யாவில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்துவதற்கு முடிந்தளவுக்கு இடையூறு செய்யலாம் என்பது, அமெரிக்காவின் திட்டம்.
வல்லரசுகளின் பனிப்போரில் களம் மாறியிருக்கிறது; காட்சிகள் மாறியிருக்கின்றன; நடிகர்களும் மாறியிருக்கின்றனர்; வெல்லப்போவது யார் என்பதை, காலம்தான் சொல்ல வேண்டும்.

சனி, 16 மே, 2015

சீனர்களுக்கு புரியும் மொழி!

 பிரதமர் மோடியின் மூன்று நாள் சீன சுற்றுப்பயணம், சுமுகமாக நடந்தேறியிருக்கிறது. அந்நாட்டு அதிபர், பிரதமர், கட்சியினர், தொழில் துறையினர் என எல்லோரையும் சந்தித்து விட்டார். 24 ஒப்பந்தங்களும்,  கையெழுத்தாகி இருக்கின்றன. வரலாற்றில் நிலைத்து நிற்கக்கூடியவை என்றெல்லாம், அவற்றில் எதுவும் இல்லை. சுருங்கச்சொன்னால், உப்புச் சப்பற்ற வெற்றுக் காகிதங்கள்.
இந்த ஒப்பந்தங்களாலும், பேச்சுவார்த்தையாலும், இரு நாடுகளுக்கும் எல்லைப்பிரச்னை தீரப்போவதில்லை; இந்தியா, விட்டுக்கொடுத்தால் ஒழிய, சீனர்கள் சமாதானம் அடையப்போவதும் இல்லை.
காரணங்கள் நிறைய இருக்கின்றன. பாரம்பரியமும், வரலாறும் கொண்ட நாடுகளில் சீனாவுக்கு இணையானது இந்தியா என்பதை, சீனர்களால் ஜீரணித்துக் கொள்ள முடிவதில்லை.
‘திபெத் விவகாரம், இந்தியாவால் தூண்டி விடப்பட்டது; தூண்டி விடப்படுகிறது’ என்பது அவர்கள் எண்ணம். ஆகவே, சீனர்கள், இந்தியாவை நம்புவதில்லை; அதனால் என்ன? இந்தியாவும்தான் சீனாவை நம்புவதில்லை. ஆனால், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில், சீனா நேரடியாகவே ஈடுபடுகிறது. காந்தியின் தேசம் அப்படிச் செய்ய முடியுமா? ஆகவே, கைகட்டி, வாய் பொத்தி, நடப்பதை வேடிக்கை பார்க்கிறது.
வடகிழக்கு எல்லையில் இருக்கும் பிரிவினைவாதக் குழுவினருக்கு, ஆயுதங்கள் அனைத்தும் சீனாவில் இருந்தே கிடைக்கின்றன. ‘உல்பா’ பிரிவினைக்குழுவின் முக்கியத்தளபதி, சீனாவில் இருந்தே செயல்படுகிறார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியை தன் வசம் வைத்திருக்கும் சீனா, மற்றொரு பகுதியில், சர்வதேச சட்டங்களுக்கு முரணாக, இப்போது பாதை அமைக்கிறது; நமது வெளியுறவுத்துறை செயலாளர்களும், செய்தித் தொடர்பாளர்களும், பேஸ்புக், ட்விட்டர் எதிர்ப்பைத்தாண்டி வெறென்ன செய்து விட முடியும்?
ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதி வழியாக சீனா அமைக்கும் நெடுஞ்சாலைப்பணி முடிந்து விட்டால், அந்நாட்டின் உட்பகுதிகளுக்கும், அரபிக்கடல் துறைமுகங்களுக்கும் நேரடித்தொடர்பு ஏற்பட்டு விடும். அதற்கு வசதியாகவே, பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தை கேட்டு வாங்கி, மேம்படுத்தி வருகிறது சீனா.
பிரம்மபுத்ரா நதி நீர் முழுமையும் உரிமை கொண்டாடும் சீனா, அதை தன் நாட்டின் உட்பகுதிகளுக்கு திசை திருப்பி விடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. அவ்வப்போது, அந்நாடு வெளியிடும் வரைபடங்களில், இந்தியப்பகுதிகள் பலவும், சீனாவின் அங்கங்களாக சித்தரிக்கப்படுகின்றன.
இந்திய எல்லைக்குள் அவ்வப்போது ராணுவத்தினரை அனுப்பி, தொல்லை கொடுப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் சீனா, நேபாளம், பூடான், வங்கதேசம், பர்மா, இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகளில், இந்திய எதிர்ப்பை கிளறி விடுகிறது.
இந்த விஷமங்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் நிலையில், அடுத்தடுத்து வந்த இந்திய அரசுகள் எதுவும் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. சப்பாணியான முந்தைய காங்கிரஸ் அரசு தான் ஜவ்வாக இழுத்தது என்றால், பலசாலி என்று பீற்றிக்கொள்கிற இந்த அரசும், ஏனோதானோ என்றே இருக்கிறது.
சீனாவுக்கு தலைவலியை உண்டாக்குகிற விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது தைவான். அதை இன்னும் இந்தியா அங்கீகரிக்கவில்லை. அதாவது, தூதரக உறவே கிடையாது. சீனா கோபித்துக்கொள்ளும் என்பதே, நேரு காலம் முதலாக, இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கிறது.
அடுத்தது, தென் சீனக்கடல் எல்லை விவகாரம். இந்தக்கடல் முழுவதும் தன் ஆளுகைக்கு உட்பட்டது என்கிறது, சீனா. அதை, மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், புரூனே, தைவான் நாடுகள்  ஏற்பதில்லை. அவ்வப்போது மோதலும் நடக்கிறது.
வியட்நாம் நாட்டுக்காக தென் சீனக்கடலில் எண்ணெய் கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா ஈடுபடும் என்று அறிந்தவுடன், அதை சீனா ஆட்சேபித்தது; இன்னும் ஆட்சேபித்துக் கொண்டிருக்கிறது. இப்போது, நம்மவர்கள் ஜகா வாங்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
திபெத் விவகாரம் சர்வதேச அளவில் பிரபலமானது. அதை பயன்படுத்தியே, சீனாவுக்கு அதிகபட்ச பயம் காட்ட முடியும். அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அதைத்தான் செய்கின்றன. சீனா&ஜப்பான் உறவும் சுமூகமாக இல்லை. இரண்டாம் உலகப்போரில் ஆரம்பமான மோதல் அது; கடல் எல்லை விவகாரம், தீவுகளை சொந்தம் கொண்டாடுவது என இன்றளவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சீனாவின் உட்பகுதியில், தனி நாடு கோரிக்கைகள் இருக்கின்றன. கோரிக்கைக்காக, பயங்கரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்தும் குழுக்கள் இருக்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்து கொண்டு, தனி நாடு கோரிக்கையை வலியுறுத்துவோரும் உண்டு.
இப்படி பலப்பல பிரச்னைகளை கொண்டிருக்கும் சீனா, சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம், இந்தியர்களுக்கு இடையூறு செய்து கொண்டே இருக்கிறது. எங்கோ இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் சீனா, தன் பண பலத்தை காட்டுவதால், நமக்கெந்த பாதிப்பும் இல்லை. ஆனால், இங்கே இருக்கும் இலங்கையிலும், மாலத்தீவிலும் கொட்டப்படும் சீனத்துப்பணம், நிச்சயமாக இந்தியாவுக்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
எல்லாம் அறிந்திருந்தும், இந்தியத்தலைவர்கள், சீனர்களுக்கு அடங்கிப்போவதையே வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். பிலிப்பைன்ஸ், வியட்நாம் நாட்டுத்தலைவர்களுக்கு இருக்கும் நெஞ்சுரம் நம்மவர்களுக்கும் வர வேண்டும். மிரட்டி மீன் பிடிக்க நினைக்கும் சீனர்களுக்கு, அவர்களது பலவீனங்களை பட்டியலிட்டுக் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.
‘இந்தோ சீனி பாய் பாய்’ என்று கூடிக்குலாவியதெல்லாம், நேரு இருக்கும்போதே முடிவுக்கு வந்து விட்டது. பற்பசை விளம்பரம்போல் சிரித்துக்கொண்டு பேசுவதும், கேமராவுக்கு ‘செல்பி’ போஸ் கொடுத்துக் கொண்டே பேசுவதும், சீனாவை பொறுத்தவரை, சற்றும் பயனற்றவை. ‘நீ என்னைக் கால் வாரினால், நானும் கால் வாரி விடத் தயங்க மாட்டேன்’ என்பதே, சீனர்களுக்கு புரியும் மொழி. நம்மவர்கள் உணர்ந்தால், சரி!

வியாழன், 5 மார்ச், 2015

மாயம் ஆகாயம்!


அறிவியல் தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இன்றைய காலத்திலும், யாராலும் விளங்கிக்கொள்ள முடியாத மர்மம் ஒன்று உண்டெனில், அது மலேசிய விமானம் மாயமான விவகாரமாகத்தான் இருக்க முடியும். ஓராண்டு கடந்து விட்டது. விமானம் எங்கே போனது, என்ன ஆனது, பயணிகள் கதி என்ன என்ற கேள்விகளுக்கு விடை கிடைத்தபாடில்லை.
வீதிகளில் நடப்பவை, வீட்டுக்குள் இருப்பவை எல்லாம் கண்டறிந்து சொல்லும் செயற்கைக்கோள்கள் பயனற்றவை ஆகி விட்டன. கப்பல்கள், மின்னணு சமிக்ஞை கண்டறியும் கருவிகள், விமானங்கள், நீர்மூழ்கிகள், கடல் ஆழம் சென்று தேடும் நீச்சல் வீரர்கள் இருந்தும், காணாமல் போனது, இன்னும் போனதாகவே இருக்கிறது. இந்தியப்பெருங்கடலில் சல்லடை போட்டுத் தேடியாகி விட்டது. வங்கக்கடல் வரையிலும் வந்து பார்த்தாகி விட்டது.
நம்மூரில், ஆளோ, பொருளோ காணாமல் போனால், வெற்றிலையில் மை போட்டுப்பார்ப்பது வழக்கம். மை போட்டுப்பார்க்கும் மந்திரவாதி, ‘வடக்க, கெழக்க போயிருக்குது, இன்னும் ஒரு மாசத்துல தானே திரும்பி வரும்’ என்று குத்து மதிப்பாகச் சொல்லி வைப்பார். அப்படிச் சில, மலேசிய மந்திரவாதிகளும்கூட முயற்சித்துப் பார்த்து விட்டார்கள்; மாயமான விமானம் வந்தபாடில்லை.
விமானத்தில், பயணிகள், ஊழியர்கள் என 239 பேர் பயணித்தனர். அவர்களில் ஐந்து பேர் இந்தியர்கள். மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலத்தின் சகோதரி மகன், அவரது சீனத்து மனைவி,  சென்னை
யை சேர்ந்த தொண்டு நிறுவன அதிகாரி சந்திரிகா எனச்சிலர் பற்றித்தான் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. மற்ற பயணிகளில், பெரும்பகுதியினர் சீனர்கள்.
மாயமான விமானம், என்ன ஆகியிருக்கும் என்று பல விதமான கற்பனைகள். வேற்று கிரகவாசிகள் இழுத்துக் கொண்டு சென்றிருக்கலாம் என்று பலருக்கும் சந்தேகம் இன்னமும் இருக்கிறது. இந்தியப்பெருங்கடலின் கட்டக்கடைசியில், அமெரிக்க ராணுவ தளம் இருக்கும் டியாகோ கர்சியோ தீவில் தரை இறங்கியிருக்கலாம் என்று கூட, யூகங்கள் வெளியாகின. சந்துகளில் சிந்துபாடுவதை வழக்கமாக கொண்ட பிரபல டுபாக்கூர் சாமி, ‘மாயமான விமானம், பாகிஸ்தானில் பதுக்கப்பட்டிருப்பதை, போயிங் நிறுவன ‘சோர்ஸ்’ சொல்லிவிட்டது’ என்றொரு புளுகுமூட்டையை கூசாமல் அவிழ்த்து விட்டார்.
ஆயிரமாயிரம் கற்பனைகளுக்கு நடுவே, இந்தியப் பெருங்கடலில் ஏதோ பெயரளவுக்கு தேடிக் கொண்டிருக்கிறது, ஆஸ்திரேலிய ராணுவம். எந்தத் தகவலும் இல்லாமல் அலைக்கழிக்கப்படும் பயணிகளின் உறவினர்களை நினைத்தால் பாவப்படவே தோன்றுகிறது.
மலேசியாவில் பரவாயில்லை; சீனாவில், மாயமான விமானம் பற்றி தகவல் கேட்கச் செல்லும் உறவினர்களை, சீனத்துப் போலீசார், அடித்து உதைத்தும், மிரட்டியும் அனுப்புகிறார்களாம். பரிதாபப்படுவதை தவிர, நாமென்ன செய்ய முடியும்!

ஞாயிறு, 1 மார்ச், 2015

ராகுல் எங்கே?

ராகுல் காந்தியை காணவில்லை; டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தொற்றிக்கொண்டு, வாரம் ஒன்றாகிவிட்டது. விடை இன்னும் தெரிந்தபாடில்லை. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை சமாளித்தாக வேண்டுமே!
காங்கிரஸ் பெருந்தலைகள், ‘டிவி’க்காரர்களின் மைக்குகளை கண்டாலே, ‘துண்டைக்காணோம், துணியைக்காணோம்’ என்று ஓடும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. முதல் கேள்வியே, ‘ராகுல் எங்கே’ என்று வந்தால், அவர்கள் என்னதான் சொல்வார்கள், பாவம்!
விவகாரம் ‘டிவி’, பத்திரிகைகளில் வெளியில் வந்தவுடன் உஷாரான கட்சித்தலைமை, தலைவர் அனுமதியுடன் (அவங்க அம்மாதான்) ராகுல் விடுப்பில் சென்றிருப்பதாக, பீலாவை அள்ளிவிட்டது. அடேங்கப்பா, எவ்வளவு பெரிய உண்மை!
அவர் விடுப்பில் சென்றாரோ, டில்லி தோல்விக் கடுப்பில் சென்றாரோ, நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு வராமல், சென்று விட்டதுதான்  வருத்தப்பட வேண்டிய விஷயம். அவருக்கு ஓட்டுப் போட்ட தொகுதி மக்களின் நலன் குறித்து, அவர் நாடாளுமன்றத்தில் பேசியிருக்க வேண்டாமா? (ஆமா, பேசீட்டாலும்...!)
விஷயம் ஊரெங்கும் பரவிவிட்டதால், ‘எங்கே ராகுல்’ என்று, இணையத்தில் தேடுபவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கிலாகி விட்டது. இதுதான் சந்தர்ப்பம் என்றெண்ணிய வணிக நிறுவனம் ஒன்று, ‘வேர்இஸ்ராகுல்’ என்ற பெயரில், தளத்தை தொடங்கி, இணையத்தில் கடை விரித்துவிட்டது. (என்ன ஒரு வில்லத்தனம்...!)
இருக்கும் குழப்பங்கள் போதாதென்று, டில்லி காங்கிரஸ்காரர் ஒருவர், ராகுல், ஸ்வெட்டர், குல்லாயுடன், டெண்ட் அடித்து உத்தராகண்ட் மாநிலத்து மலைவாசஸ்தலத்தில் தங்கியிருப்பது போன்ற படத்தை, ‘ட்விட்டர்’ பதிவில் ஏற்றி விட்டார். அதையும் மறுக்க வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு. பட்ட காலிலேயே படும் என்பது இதுதான் போலிருக்கிறது. (அதெல்லாம், ரொம்பப் பழைய படமாமே)
இந்தப் படங்களால், உத்தராகண்ட் போலீசாருக்கு வந்தது தலைவலி. ‘கடும் பாதுகாப்பில் இருக்க வேண்டிய தலைவர், நம் மாநிலத்தில் எங்கோ தலைமறைவாக இருக்கிறார், ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று நடந்து, நாம் மாட்டிக் கொள்ளக்கூடாதே’ என்ற பயத்தில், மலை மலையாக அலைந்து, தேடிக் கொண்டிக்கிருக்கிறார்களாம். அந்த ஊர் காங்கிரஸ்காரர்களால், டில்லி தலைமைக்கு வந்தது இன்னொரு பிரச்னை. ‘எங்களுக்குக்கூட சொல்லாமல், எப்படி எங்க மாநிலத்துக்குள் வரலாம்’ என்று, போன் மேல் போன் போட்டு, உயிரை எடுக்கிறார்களாம். (வேறு எதற்கு, வரவேற்பு கொடுக்கத்தான்)
இது தவிர, வேலைவெட்டியில்லாத ஆசாமி ஒருவன், ‘ராகுல் காந்தியை காணவில்லை, எங்கே போனார் என்று கண்டுபிடிக்க வேண்டும்’ என்று, நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து விட்டான். கெஜ்ரிவால் வாங்கியதுபோக, மிச்சம் மீதி மானத்தை, இந்தாள் வாங்கிவிடுவான் போலிருக்கிறது.
அப்படியும் தீர்ந்ததா பிரச்னை? அதுதான் இல்லை. ‘ராகுல் காந்தியை காணவில்லை. கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு நிச்சயம்’ என்று, உ.பி., மாநிலத்தில் ஒரு குரூப் ஆங்காங்கே போஸ்டர் ஒட்ட ஆரம்பித்து விட்டது.
இப்படி களேபரம் நடப்பதெல்லாம் ராகுலுக்கு தெரியாமலா இருந்திருக்கும்? நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால், ஓசியில் கிடைக்கும் விளம்பரத்தை இழப்பதற்கு, யாருக்குத்தான் மனது வரும்? ‘அரசியலில் இதெல்லாம் சர்வ சாதாரணம்’ என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்!

ஆடு புலி ஆட்டம் ஆரம்பம்!

‘வட துருவமும், தென் துருவமும் இணைந்திருக்கின்றன’ என்பது, மீண்டும் முதல்வர் பதவியை கைப்பற்றி விட்ட முப்தியின் கருத்து. அதிலொன்றும் மிகையில்லை.
புலியுடன் ஆடுகள் உறவாடுவதும், பூனைகள் எலியுடன் விளையாடுவதும், காண்பதற்கு அரிய காட்சிகளே. ஆகவே, இன்றைய ஜம்மு பதவியேற்பு விழாவில், கட்டித்தழுவிக் கொள்ளும் காட்சிகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையென வர்ணிக்கப்படுவது சரியே.
எதிரெதிர் நிலைப்பாடுகளை கொண்ட கட்சிகள், கூட்டுச் சேர்ந்து அரசமைப்பது, இந்திய அரசியலுக்கு புதிதல்ல. ஆனால், ஜம்மு காஷ்மீர் குறித்து, பா.ஜ., இவ்வளவுகாலம் பேசிவந்ததை கொஞ்சமேனும் அறிந்திருப்பவர்களுக்குக்கூட, இந்தக்கூட்டணியின் முரண்பாடுகள் நிச்சயம் தெரிந்திருக்கும். முப்தியும், அவரருமை மகளும், கலகக்கும்பலுக்கு தலைமை வகிப்பவர்கள். அவர்களது வெற்றியில், பிரிவினைவாதிகளின் பங்களிப்பு அதிகம் என்பதுவும் வெளிப்படை.
வி.பி.சிங் ஆட்சியில், உள்துறை அமைச்சராக இருந்த முப்தியின் மூன்றாவது மகளை, பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுவிட, அவரை மீட்க, சிறையில் இருந்த பயங்கரவாதிகள் ஐந்து பேரை, மத்திய அரசு விடுவித்தது. அதுவும், மாநில அரசின் கடும் எதிர்ப்பை மீறி.
பின்னாளில், அதே பயங்கரவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து, நாட்டுக்கு எதிரான போராட்டங்களை நடத்திக்காட்டியது, முப்தியின் வரலாறு.
இத்தகைய நன்றி கெட்ட நல்லவருடன்தான், இன்று, பா.ஜ., கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்திருக்கிறது. உரிய சந்தர்ப்பம் வரும்போது, பா.ஜ.,வை ஓரங்கட்டிவிட்டு, நாம் தனித்து ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்பது முப்தியின் திட்டமாக இருக்கும். பா.ஜ.,வுக்கும் நிச்சயம் அதுபோன்ற எண்ணங்கள் இருக்கும். ‘சந்தர்ப்பவாதக் கூட்டணி’ என்ற வார்த்தைப் பிரயோகத்துக்கு, காலாகாலத்துக்கும் உதாரணமாக நிற்கப்போவது இந்தக்கூட்டணிதான்.
பரூக், ஓமர் அப்துல்லாக்கள், இந்திய தேசியத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்; முப்தியும், அவர் மகளும் அப்படியில்லை என்பதை நாடறியும்; நரேந்தர் தாமோதர்தாஸ் மோடியும் அறிவார். அப்படியிருந்தும், இப்படியொரு கூட்டணியை பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்.,சும் ஏற்றுக்கொண்டதுதான் பலருக்கும் வியப்பளிக்கிறது.
ஆக, ஆடு புலி ஆட்டம், அமர்க்களமாய் ஆரம்பித்திருக்கிறது. புலி யார், எலி யார், பலி யார் என்பதெல்லாம், போகப் போகத்தானே தெரியும்?

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

வாரிசு அரசியல்!

‘என் குடும்பத்தில் மட்டும்தான் வாரிசு அரசியல் தெரிகிறதா, காஷ்மீரில் இல்லையா, கர்நாடகாவில் இல்லையா, ஒரிசாவில் இல்லையா’ என்றெல்லாம் அவ்வப்போது ஓலக்குரல்கள் ஓங்கியும், வீங்கியும் ஒலிப்பதை, சொரணை கெட்ட தமிழர்கள், அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க வாய்ப்பில்லை.
அப்படி போடப்படும் பட்டியல்கள் எல்லாம், அகில இந்திய அளவில் மட்டுமே  நின்று போவது, நம்மைப்போன்றவர்களுக்கு, உள்ளபடியே வருத்தம் தருவதாக  இருக்கிறது.
ஆகவே, உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் நலன் கருதியும்,  அவர்கள் வாழும் நாட்டிலும், வாழ ஆசைப்படும் நாட்டிலும், வாரிசு அரசியல் வாழ்கிறது என்பதை நினைவூட்டிக்காட்டவுமே இந்தப்பதிவை எழுத வேண்டியிருந்தது.
சரி, விஷயம் இது தான்.
அமெரிக்காவில் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ், பலருக்கும் நினைவில் இருப்பார். அவரது இளைய மகனும், இப்போது அதிபர் பதவிக்கான போட்டியில் குதிக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
முதலாவது அதிபர் புஷ், முதல் வளைகுடாப்போரை தலைமை வகித்து நடத்தியவர். அதாவது, சதாம் உசேன், குவைத்தை ஆக்கிரமித்ததை  எதிர்த்து போர் நடத்தியவர். நான்கு ஆண்டுகள் அமெரிக்க அதிபராக  இருந்தார். முன்னதாக இரண்டு முறை, துணை அதிபராகவும் இருந்திருக்கிறார்.
அவரது மூத்த மகன், மற்றொரு ஜார்ஜ் புஷ். இவர், இரண்டாம் வளைகுடாப் போர்  நடத்தியவர். இவரது காலத்தில்தான், அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. பதிலடியாக ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்து, தலிபான் ஆட்சியை அகற்றினார் புஷ். ஈராக் மீது போர் தொடுத்து, சதாம் உசேன் ஆட்சியை காலி செய்ததும் இவர்தான். அதிபர் பதவிக்கு வருவதற்கு முன், டெக்சாஸ் மாகாண கவர்னராகவும் இரண்டு முறை பதவி வகித்திருக்கிறார்.
இப்போது, முதலாவது ஜார்ஜ் புஷ்ஷின் இளைய மகன், அதாவது, இரண்டாம்  புஷ்ஷின் சகோதரர், ஜெப் புஷ், அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் குதிக்கலாமா  என்று தீவிர ஆலோசனையில் இருக்கிறார். அதற்கு வசதியாக, பல்வேறு  நிறுவனங்களின் நிர்வாகக்குழுவில் இருந்தும் வெளியேறி இருக்கிறார்.
இவர், ஏற்கனவே, புளோரிடா மாகாணத்தில் இரண்டு முறை, கவர்னராக பதவி  வகித்தவர். இவர் புளோரிடா கவர்னராகவும், இவரது சகோதரர் டெக்சாஸ் கவர்னராகவும், ஒரே நேரத்தில் பதவி வகித்திருக்கின்றனர், என்பது குறிப்பிடப்பட வேண்டிய  விஷயம்.
குடியரசுக் கட்சிதான், இவர்களுக்கு இத்தனை வாய்ப்புகளை அள்ளி வழங்கியிருக்கிறது; இன்னும் வழங்கவும் போகிறது. தந்தை அதிபராக பதவி வகித்த காலத்தில், ஜெப் புஷ், எப்படியெல்லாம் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார் என்பது பற்றி, நியூயார்க் டைம்ஸ் கட்டுரை தீட்டியிருக்கிறது. அதையும் பாருங்கள்:

அமெரிக்கர்கள் அறியாத சட்டமில்லை; தர்மமும் இல்லை என்பது நாமறிந்த ஒன்று. ஆகவே, இங்கே நடக்கும் வாரிசு அரசியலுக்காக, தமிழர்கள் வெட்கப்பட வேண்டும், வேதனைப்பட வேண்டும், தலைகுனிய வேண்டும் என்று யாரேனும் பிற்போக்குவாதிகள் உளறிக் கொண்டிருந்தால், அதையெல்லாம் பொருட்படுத்த தேவையில்லை என்பதே, இன்றைய நம் விடுமுறை தின கருத்து.

வியாழன், 12 பிப்ரவரி, 2015

வருமுன் காக்கும் ஜப்பான்!

ஜப்பான், எந்தளவுக்கு முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறது, என்பதற்கு இந்த சம்பவம், ஒரு உதாரணம். சமீபத்தில், இரு ஜப்பானியர்களை, இஸ்லாமிய பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு, பணம் கேட்டு மிரட்டியதும், பின்னர் தலை துண்டித்து கொன்றதும், உலகம் அறிந்ததே.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் நெருக்கடியை அந்நாட்டு அரசுக்கு ஏற்படுத்திய இந்த விவகாரத்தால், அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஜப்பான் மேற்கொண்டுள்ளது. சிரியா உள்ளிட்ட, பிரச்னைக்குரிய நாடுகளில் இருக்கும் தங்கள் நாட்டவர் அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உத்தரவிட்டிருக்கிறது.
மத்தியக்கிழக்கு நாடுகளுக்கு செல்லும் அனைவருக்கும் அவ்வளவு சீக்கிரம் அனுமதியும் வழங்குவதில்லை. தீவிர விசாரணைக்குப் பிறகே, அதுவும் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அனுமதி கிடைக்கிறது.
பிரச்னைக்குரிய இடங்களுக்கு செல்ல நினைப்பவர்களுக்கு நிச்சயம் அனுமதி கிடையாது.
அமெரிக்க கூட்டுப்படை நாடுகளுக்கு பொருளாதார உதவி செய்யும் ஜப்பானுக்கு, பயங்கரவாதிகள் விடுத்திருக்கும் நேரடி மிரட்டலே இதற்கு முக்கியக்காரணம்.
கடந்த வாரம், சுஜிமாட்டோ என்ற பத்திரிகை புகைப்படக்காரர், சிரியா செல்வதற்கு முயற்சிப்பதை அறிந்த ஜப்பான் வெளியுறவுத்துறை, பயணத்துக்கு தடை விதித்ததுடன், உடனடியாக அவரது பாஸ்போர்ட்டை பறிமுதலும் செய்து விட்டது.
அரசு உத்தரவை மீறும் பட்சத்தில் அவருக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கவும் ஜப்பானிய சட்டத்தில் வாய்ப்புள்ளது. பயங்கரவாதிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்கு, தானாக விரும்பிச் சென்று ஒருவர் பிடிபட்டு விட்டாலும், அவரை மீட்பதற்கான தார்மீக கடமை அரசுக்கு இருக்கிறது.
அந்த வகையில், பத்திரிகையாளரின் உயிரை காப்பதற்கான கடமையை கொண்டிருப்பதாலேயே, அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துள்ளதாக, அரசு அறிவித்துள்ளது.
ஆர்வக்கோளாறு ஆசாமிகள், வலியச்சென்று பயங்கரவாதிகளிடம் சிக்கிக் கொண்டு, அரசுக்கு உள்நாட்டில் நெருக்கடி ஏற்படுத்துவதை தவிர்க்கவே இந்நடவடிக்கையை பிரதமர் அபி தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன், பயங்கவாதிகளால் தலை துண்டித்த கொல்லப்பட்ட ஜப்பானிய பத்திரிகையாளர் கெஞ்சி கட்டோவை, ‘பயங்கரவாதிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்கு செல்ல வேண்டாம்’ என்று, அந்நாட்டு அதிகாரிகள் மூன்று முறை அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் அதை பொருட்படுத்தாத அவர், தன் செயலுக்கு தானே பொறுப்பேற்பதாக வீடியோ பதிவை செய்து வைத்து விட்டு, பயங்கரவாதிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்கு சென்றிருப்பது, பின்னர் தெரியவந்தது.
‘தனி நபர் சுதந்திரத்தை மீறுவதாக இருந்தாலும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த அரசின் நடவடிக்கை, மிகச்சரியானது’ என்பதே, அந்நாட்டினரின் கருத்தாக இருக்கிறது.


புதன், 28 ஜனவரி, 2015

இது, தமிழர்களின் ராசி?

இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக பதவி வகித்த சுஜாதா சிங், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த இடத்தில், அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பணியாற்றிய ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவி நீக்கப்பட்டவரும் சரி, பதவி பெற்றிருப்பவரும் சரி, இருவருமே தமிழர்கள். சுஜாதா சிங், இந்திய உளவுத்துறையான ஐ.பி., தலைவராக பதவி வகித்த டி.வி.ராஜேஸ்வரின் மகள். சேலத்தை சேர்ந்தவர்; காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட காலம் விசுவாசமாக இருந்த காரணத்தால், ஓய்வுக்குப்பின் அவருக்கு உ.பி., மாநில கவர்னர் பதவி கிடைத்தது. அந்தக்காரணமோ, வேறு என்னவோ, பதவிக்காலம் முடிவதற்கு எட்டு மாதங்கள் முன்னதாகவே, சுஜாதா, பதவி நீக்கம் செய்யப்பட்டு விட்டார்.
இப்போது வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெய்சங்கர், அத்துறையில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர். ஆசிய, ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும், பணியாற்றியவர். இரு ஆண்டுக்கு முன், லடாக் பகுதியில், சீன ராணுவமும், இந்திய ராணுவமும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல், சீனாவில் தூதராக இருந்த ஜெய்சங்கரின் ராஜதந்திரத்தால், சுமுகமாக தீர்க்கப்பட்டது என்றொரு கருத்துண்டு.
அமெரிக்காவுடன், அணுசக்தி உடன்பாடு ஏற்படுவதிலும் இவரது பங்கே பிரதானமாக இருந்தது. ஐ.எப்.எஸ்., அதிகாரி தேவ்யானி விவகாரம் பூதாகரமாக கிளம்பியபோது, அமெரிக்காவுக்கான இந்திய தூதராக, முந்தைய காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட ஜெய்சங்கர், அடுத்து வந்த மோடி அரசிலும் நற்பெயரை சம்பாதித்து விட்டார்.
மோடியின் அமெரிக்கப் பயணத்துக்கும், பிரசித்தி பெற்ற மேடிஸன் ஸ்கொயர் கூட்டத்துக்கும், சிறப்பான ஏற்பாடுகளை செய்து, மோடியின் கவனத்தை கவர்ந்தவர் ஜெய்சங்கர். ஜெய்சங்கரின் தந்தை சுப்பிரமணியம், சிறந்த ராஜதந்திரி. பாதுகாப்புத்துறை ஆலோசகராக இருந்தவர். சகோதரர் விஜயகுமார், ஐ.ஏ.எஸ்., அதிகாரி. மற்றொரு சகோதரர் சஞ்சய் சுப்பிரமணியம், வரலாற்று ஆய்வாளர். ஜெய்சங்கரின் மனைவி கியாட்டோ, ஜப்பானியப்பெண்.
வெளியுறவுச் செயலாளர் பதவி, திடீரென பறிக்கப்படுவது, இது முதல் முறையல்ல. ராஜிவ் ஆட்சிக்காலத்தில், இலங்கைப் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, வெளியுறவுச் செயலாளராக இருந்த தமிழர் ஏ.பி.வெங்கடேஸ்வரன், ராஜினாமா செய்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ராஜிவ், தன்னை அவமதிக்கும் வகையில் பேசியதாக உணர்ந்த வெங்கடேஸ்வரன், தானாக முன்வந்து பதவியில் இருந்து வெளியேறினார். இப்போது, பதவி விலகும் வாய்ப்புக்கூட அளிக்கப்படாமல், சுஜாதா வெளியேற்றப்பட்டுள்ளார். ‘பெற்றோர் செய்த பாவம், பிள்ளைகளைச் சேரும்’ என்பார்கள்; சுஜாதாவின் பதவி நீக்கமும், அப்படித்தான் போலிருக்கிறது!