கிணறு வெட்டும் வேலை, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

புதன், 22 அக்டோபர், 2014

கிணறும், கிணற்றடி வாழ்வும்!

நதிக்கரைகளில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த ஆதி மனிதர்கள், நதியறியா திசைகளிலும் நிலத்தை தோண்டி தண்ணீர் எடுக்க முடியும் என்றறிந்தபிறகே, நாலாபுறமும் பயணிக்கத் தொடங்கினர். அந்த வகையில், ஆதி மனிதனின் தலையாய கண்டுபிடிப்புகளில் ஒன்றென்ற பெருமை, கிணறுகளுக்கு நிச்சயம் உண்டு.
அப்படி பலப்பல நூற்றாண்டுகளாக, மனித குலத்துக்கு பேருதவி புரியும் கிணறுகளுக்கு, அந்திமக்காலம் நெருங்கி விட்டதாகவே தெரிகிறது. ஆயிரமாயிரம் அடிகளுக்கு ஆழத்துளைத்து விடும் அறிவியல் யுகத்தில், ஆதி மனிதன் உருவாக்கிய கண்டுபிடிப்பொன்று, களை இழந்து போனதில் ஆச்சர்யம் எதுவுமில்லைதான்.
எங்கள் ஊருக்குள் 30 ஆண்டுக்கு முன்பு வரை, நூற்றுக்கும் மேற்பட்ட கிணறுகள் இருந்தனவென்பது, என் நினைவில் பசுமையாக இருக்கிறது. கிணற்றடியில் எப்போதும் தண்ணீர் சேந்தும் பெண்கள் கூட்டம் கூடியிருக்கும். வீட்டுக்கு வீடு குடத்தில் தண்ணீர் சேந்துவதற்கான கயிறுகள் கூட இருக்கும்.
காலங்கள் மாறி விட்டன. ஊருக்குள் கிணறுகளே இல்லை. இருக்கும் ஓரிரண்டு பொதுக்கிணறுகளிலும், நீரோட்டம் வற்றி விட்டதென, ஆழத்துளைத்து அதிலிருந்து தண்ணீர் எடுக்கும் முறை வந்து பல்லாண்டுகள் ஓடி விட்டன.
எங்கள் ஊர்ப்பக்கம் கிணற்றுப்பாசனம் வழக்கொழிந்து போகும் நிலையில் இருக்கிறது. குப்பை கொட்டவும், கழிவைத் தேக்கவும் பயன்பட்டதுபோக, மீதமிருக்கும் கிணறுகள் எல்லாம், மிஞ்சிப்போனால், இன்னுமொரு தலைமுறை பார்க்கக்கூடும்.
கிணறும், கிணறு சார்ந்த மனித வாழ்க்கையையும் ஆவணப்படுத்தும் முயற்சிதான் இந்த வலைப்பக்கம். வாசகர்களை, இந்த வலைப்பக்கத்துக்கு அன்புடன் வரவேற்கிறேன்.